Saturday 12 December 2015

வீணையடி நீ எனக்கு - மகாகவி பாரதியார்



இசை : ----- பாடல் : மகாகவி பாரதியார்
குரல்கள் : ராகுல் வருடம் : ----

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு
காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசைமதுவே! கனியே! அள்ளுசுவையே! கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, விந்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவ மாய்ச்சமைந்தாய்! உள்ளமுதமே! கண்ணம்மா!

வீணையடி நீ எனக்கு...


No comments: