Thursday 31 March 2016

ஊரு ஓரம் தோட்டத்திலே - பாடலெடுத்து



இசை : ஜானகிராஜ் பாடல் : நவகவி
குரல்கள் : கரிசல் திருவுடையான் வருடம் : ----

ஊரு ஓரம் தோட்டத்திலே
முனியன் போட்டான் மொந்தன் வாழை
கவனமாக கேளுங்கம்மா - அந்த
கதைய இப்போ சொல்லி வாரேன்
கதைய இப்போ சொல்லி வாரேன்

அப்பன் பாட்டன் காலத்து சொத்து
அரைக்காணி நஞ்ச நெலம்
இன்னைக்கி சமஞ்ச சின்னப் பொண்ணாட்டம்
பொன்னா மின்னுற மண்ணுங்கய்யா
பொன்னா மின்னுற மண்ணுங்கய்யா

இளம்வாழ கெழங்கு நட்டு
பதமாக பாத்தி கட்டி
ஆத்துப்பக்கம் ஏத்தம் வச்சு
அல்லும் பகலும் நீரெறச்சு

காத்துப் பட்டா நோகுமுன்னு
கன்னுப் பட்டா தோசமுன்னு
கோட்ட மதிலாட்டம் வேலிகட்டி - உள்ள
குலுங்குது பார் வாழதோட்டம்
ஆயிரம் பூமயில் தோகை விரிச்சதோ
அசையுது பார் வாழதோட்டம்

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

வாழமரம் எட்டு மொழம்
வாழத்தாறு பத்து மொழம்
ஆயிரமாயிரம் பிஞ்சு விடும் - அவை
அத்தனையும் கிளி பச்சை நிறம்

தொட்டு தொட்டு நீவுறானே
தோட்டத்தச் சுத்தி பாக்குறானே
பட்ட கடனெல்லாம் தீருமுன்னு - அவன்
பாத்து பாத்து சொக்குறானே

தொட்டுப் புட்டா சுட்டுப்புடும்
அப்படி சிவக்கும் வாழப்பழம்
ஏழுமல தாண்டி மூங்கில வெட்டி
எடுத்து வந்து முட்டு வெச்சான்
பத்துமல தண்டி மூங்கில வெட்டி
பக்கத்தில் ஊனி நட்டு வெச்சான் - அவன்
பக்கத்தில் ஊனி நட்டு வெச்சான்

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

பள்ளிக்கு போகும் செல்லக்கண்ணு
பால்மணம் மாறாத காளைகன்னு
பெத்த மகனெனும் பாராம - ஒரு
ஒத்தப் பழங்கூட தாராம

அஞ்சு வருசத்து பஞ்சமடா - கண்ணு
அத்தன கஷ்டமும் தீருமாடா
கந்து வட்டியும் பேங்கு கடனும்
கழியட்டும் பொறு எம்மவனே

சீண்டாதேடா ராசான்னு
செல்லமகனுக்கு தோது சொல்லி
கண்ணுக்கு கண்ணா காத்த வாழ
கனி குலுங்குது பாருங்கம்மா
மயிலும் குயிலும் பாத்து பாத்து
மயங்கி நிக்குது பாருங்கம்மா

( ஊரு ஓரம் தோட்டத்திலே...

இப்படியான ஆசையிலே
இருக்கும் அந்த வேளையிலே
கும்புட்டு வந்த மாரியாத்தாள
நம்பி இருக்குற நாளையிலே

ஆள வெச்சு வெட்டி எடுத்து
அள்ளி போயிட்டான் கந்துக்காரன்
லோனு கடனில மூழ்கின நெலத்த
சப்தி செஞ்சுட்டான் சர்காரன்

கதையை கேட்ட தாய்மாரே
கதையை கேட்ட தந்தை மாரே
உங்க வீட்டிலும் எங்க வீட்டிலும்
இந்த கதைதானே நித்தம் நித்தம்
உழைக்கும் கூட்டம் ஒண்ணா சேர்ந்தா
நடக்குமா இந்த அக்கிரமம் ?
உழைக்கும் கூட்டம் ஒண்ணா சேர்ந்தா
நடக்குமா இந்த அக்கிரமம் ?

( ஊரு ஓரம் தோட்டத்திலே...



3 comments:

மணிச்சுடர் said...

உருக்குகின்ற இராகத்தில் நெருக்கமான செய்திகளை-நெஞ்சை
நொறுக்குகிற பாவத்தில் பாடிய திருவுடையானே நீ
சறுக்கலின்றி என்றும் வாழ்வாய் குரலின்
இறுக்கத்தால் மக்களைக் கட்டியே.

Nigel said...
This comment has been removed by the author.
Nigel said...

பாடல் வரிகள் மற்றும் இசை அருமை
(பாடலை உணர்ந்து பாடியுள்ளார் திரு. திருவுடையான்
சொர்க்கத்தில் உம்மை காண்பேன் என்று நம்புகிறேன்)